Saturday 14 May 2011


நோய்களை அறிய ஒரு தேடியந்திரம்
[ சனிக்கிழமை, 14 மே 2011, 04:36.01 மு.ப GMT ]
இணைய யுகத்தில் தலைவலியோ காய்ச்சலோ வந்தால் மருத்துவரை பார்பதற்கு முன்னர் பலரும் கூகுளையே நாடுகின்றனர்.
கூகுளில் நோய் தொடர்பான தகவல்களை தேடிப்பார்த்து அலசி ஆராய்ந்து அதன் பின்னரே மருத்துவரிடம் செல்கின்றனர். இன்னும் சிலர் கூகுள் உதவியுடன் சுயவைத்தியம் பார்த்து கொள்வதும் உண்டு. சிலர் நோயை முழுமையாக புரிந்து கொள்ளவும் கூகுளில் தகவல்களை தேடுகின்றனர்.
இப்படி இணையத்தில் மருத்துவ தகவல்களை தேடுபவர்களின் வசதிக்காக என்றே புதிய தேடியந்திரம் அட்ரிசியா உதயமாகியுள்ளது. நோய் அறிவதற்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம். அதாவது இந்த தேடியந்திரத்தில் நோய்க்கூறுகளை குறிப்பிட்டு தேடினால் அவற்றை குறிக்கும் நோய் என்ன என்பதை முடிவுகளாக பட்டியலிடுகிறது.
எந்த நோய் தொடர்பான தகவல் தேவை என்றாலும் இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தலாம். கூகுள் போலவே எளிமையாக உள்ளது இதன் முகப்பு. முதல் பக்க தேடல் கட்டத்தில் நோய்க்கூறுகளை டைப் செய்துவிட்டு காத்திருந்தால் போதும் நோய் என்ன நோய் என்று சொல்லி விடுகிறது.
ஆனால் இது பட்டியலிடுவது சொந்த முடிவுகள் அல்ல. இரவல் முடிவுகள் தான். அதாவது முடிவுகளை பட்டியலிட இதற்கென்று தனி வழியோ அதற்கான தேடல் தொழில்நுட்பமோ கிடையாது. பல தேடியந்திரங்கள் கூகுளின் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முடிவுகளை பட்டியலிட்டு தருவது உண்டு அல்லவா?அதே போல இந்த தேடியந்திரம் கூகுளின் பிரதான போட்டியாளரான மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தை பயன்படுத்தி மருத்துவ தகவல்களை தேடி தருகிறது.
அது மட்டும் அல்ல மருத்துவ தேடலில் ஈடுபடும் போது தொடர்புடைய நோய்க்கூறுகளையும் அருகே பட்டியலிட்டு காட்டுகிறது. அவற்றில் எந்த நோய்க்கூறுகள் எல்லாம் இருக்கிறதோ அவற்றை சேர்த்து கொள்ளலாம். இல்லாத நோய்க்கூறுகளை விலக்கி கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் உடலை பாதித்துள்ள நோய் என்ன என்பதை சரியாக கண்டு கொள்ளலாம். அதே போல நோய்க்கூறுகள் தொடர்பான நோய்கள் பட்டியலும் இடம் பெறுகிறது. எந்த நோய் என்று தோன்றுகிறதோ அதனை கிளிக் செய்தால் அந்த நோய் தொடர்பான விவரங்களையும் சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
நோய்களுக்கான சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ள விரும்பினாலோ அல்லது நோய்கள் பற்றி மேலும் தகவல் அறிய விரும்பினாலே இந்த தேடியந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment