Monday 19 September 2011


தினம் ஒரு பொன்மொழியை அறிந்து கொள்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 07:54.18 மு.ப GMT ]
இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல. பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.
சொல்லப்போனால் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே பொன்மொழிகளுக்கான தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன‌. பொன்மொழி தோட்டம்(கோட் கார்டன்) போன்ற தளங்கள் பொன்மொழிகளை அழகாக வகைப்படுத்தி தருகின்றன.
பொன்மொழிகள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கவல்லவை என்ற போதிலும் இந்த பொன்மொழி தளங்களுக்கு தினமும் விஜயம் செய்து புதிய பொன்மொழிகளை தினமும் படித்துப்பார்க்கும் வழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது சொல்லுங்கள்.
எப்போதாவது மேற்கோள் காட்ட பொன்மொழிகள் தேவைப்பட்டால் தான் இந்த தளங்களின் ப‌க்கம் செல்வது உண்டு. மற்றபடி தினம் ஒரு சொல் அறிவோம் என்பது போல தினம் ஒரு பொன்மொழி அறிவோம் என்றெல்லாம் யாரும் முயற்சிப்பதில்லை.
ஆனாலும் கூட பள்ளிக்கூட சுவர்களிலோ அல்லது அலுவலக கரும்பலகைகளிலோ எழுதப்படும் பொன்மொழிகளை நாம் பார்த்து ரசித்து சிந்திக்காமல் இருப்பதில்லை. ரீட்ரஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகளில் முன் பக்கத்தில் இடம் பெறும் பொன்மொழிகளை முதலில் படித்து மகிழும் வாசக‌ர்கள் எண்ணற்றவர் இருக்கின்றனர்.
இவ்வளவு ஏன் நண்பர்களின் வீடுகளில் அழகான காட்சி அமைப்போடு இருக்கும் படங்களில் இடம் பெற்றிருக்கும் பொன்மொழி வாச‌கங்களை எல்லோருமே படித்து ர‌சிக்கவே செய்கிறோம்.
இருந்தும் ஏன் பொன்மொழி தோட்டம் போன்ற தளங்களுக்கு நாம் தினமும் சென்று தின‌ம் ஒரு பொன்மொழியை படித்து ஊக்கம் பெறுவதில்லை. இதற்கான பதில் தெரியவில்லை. ஆனால் அழகான ஒரு தீர்வு இருக்கிறது. பொன்மொழி ரகசியம்(கோட் சீக்ரெட்) என்னும் இணைய‌தளம் தான் அந்த தீர்வு.
இந்த தளத்திற்கு ஒருமுறை சென்றால் போதும் அதன் பிறகு தினந்தோறும் பொன்மொழிகள் உங்களை தேடி வரும். அதாவது மின்னஞ்சலில் தினம் ஒரு பொன்மொழி அனுப்பி வைக்கப்படும். அதற்கு உறுப்பினராக‌ பதிவு செய்து கொள்ள‌ வேண்டும்.
ஒவ்வொரு நாளும் சிந்தித்து ஊக்கம் பெறுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம், அதன் உறுப்பினர்களுக்கு நாள்தோறும் ஒரு பொன்மொழியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிற‌து.
எப்படியும் தினமும் மின்னஞ்சல் பார்க்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிற‌து. பலருக்கு காலை எழுந்ததுமே மின்னஞ்சல் முகத்தில் விழிக்கும் பழக்கமும் இருக்கிற‌து.
எனவே இந்த சேவையில் உறுப்பினராகிவிட்டால் தினமும் பொன்மொழி தளங்களின் பக்கம் போகாவிட்டாலும் கூட மின்னஞ்சல் வழியே புதிய பொன்மொழியை படித்து விடலாம்.
தினம் ஒரு பொன்மொழியை அனுப்பி வைப்பதோடு இந்த தளம் அந்த பொன்மொழி தொடர்பான கேள்வி ஒன்றையும் அனுப்பி வைத்து சிந்திக்க வைக்கிற‌து. இந்த தள‌த்தில் இன்றே சேருங்கள், நாளை முதல் பொன்மொழி படித்து ஊக்கம் பெறுங்கள்.
http://www.quotesecret.com/

No comments:

Post a Comment